காவியத்தலைவனே!! – Kalaignar Karunanidhi Birthday Commemoration Poem

காவியத்தலைவனே

இக்கவிதை தாய் உள்ளம் அறக்கட்டளை சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளை ஒட்டி, நடைபெற்ற கவிதைப் போட்டியில் 7 நடுவர் குழுக்களால் ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் கவி விருதிற்கு’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 
திருக்குவளை மண்ணின் மைந்தனே!
முத்துவேலார் பெற்றெடுத்த முத்துச் சிற்பியே!
செம்மொழியாம் தமிழ்மொழியின் தவப்புதல்வனே!
காவியங்கள் பல படைத்த கலைஞனே!
உயிர்ப்பிக்க காலம் வராதா என ஏங்கி
சோர்ந்து சாய்ந்து கிடந்த தமிழன்னை – உன்
கம்பீர குரலுக்கும் கரும்பு சொல்லுக்கும்
உயிர் கொண்டாள் மீண்டும்!
உரையா! இசையா! நாடகமா!
உன் எழுதுகோலுக்காய் ஏங்கும்!
நலிவுற்ற கலைகள் எல்லாம்
மெய்சிலிர்த்து நின்றது உன் தமிழால்!
வீரமகளாம் கண்ணகியைக் கண்முன் காட்டியவரே!
குறளோவியம் படைத்த குரலோனே!
சிலம்பு கோல் கைகளில் சுழலும்
தமிழன்னையோ உன் நாக்கில் சுழல்வாள்
சொல்லாட்சி கலைஞனே! முத்தமிழ் வித்தகனே!
பார் போற்றும் பண்பாளனே! விடியலின் நம்பிக்கையே!
ஓய்வறியா போராளியே! சமத்துவ நாயகனே!
தமிழினம் காக்க போராடியவரே!
மூச்சடக்கி முத்துக் குளிக்க சென்றாயோ!
காலனுக்குத் தமிழ் உரைக்க சென்றாயோ!
எழுதுக்கோலுக்கு ஓய்வு கொடுக்க எண்ணினாயோ!
தமிழன்னை மடிமீது நீங்கா துயில் கொண்டாயோ!
தரணிக் கோர் ஒளி விளக்கே!
வீரன் சாவதே இல்லை! கோழை வாழ்வதே இல்லை – ஆம்
மரணம் உன்னை வெல்லவே இல்லை – நீயே
வென்றாய் அதனையும்!
முனைவர் அ.விமலாராணி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
செவாலியர்.டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி

Leave a Reply