“தீதும் நன்றும் பிறர் தர வாரா” சங்கப்பாடல் வரியும் – நம் வாழ்வும்
என் மனமறிந்து நான் நேர்மையாகத் தான் நடக்கின்றேன். ஆனாலும் ஏனோ துன்பப்படுகிறேன்?” என்ற கேள்வி எழுகிறதா? வாருங்கள் விடைகாணத் தமிழ் மழையில் நனைவோம்!
“தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்னும் புறநானூற்றுப் பாடல் வரி, இதற்கான விடையை நம் மீது தூறலாகச் சிந்துகிறது. தீமையும் நன்மையும் பிறரால் நமக்கு வருவதில்லை. நாம்தான் அதற்கு காரணம் என்கிறது இப்பாடல். மேலோட்டமாக நனைந்தால் இதுசரிதான் என்றே தோன்றுகிறது. ஆனால், ஏற்றுக் கொள்ளத்தான் சற்று நெருடலாக உள்ளது. ஏன் தெரியுமா? எனக்கு நான் நன்மை செய்வேன் சரி. ஆனால் எனக்கு நானே எப்படி தீமை செய்து கொள்வேன்? அதெப்படி சாத்தியம்? என்னும் சந்தேகமே அதற்குக் காரணம். இதற்கான விடை தேட சற்று அதிகமாகவே சிந்தனை மழையில் நனையலாம் வாருங்கள்.
கொரோனா சூழலில்,வேறு வழியின்றி நானும் வீட்டில் முடங்கி கொண்டு, இப்பாடலைப் படித்துக் கொண்டிருந்தேன். கட்டுக்கடங்காத கொரோனாவும் அதனால் நிகழும் துயரங்களும் ஏதும் செய்ய இயலாத கையறுநிலையும் மனதை வாட்டி எடுத்தது. இச்சூழலுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ நான் உட்பட ஒவ்வொரு மனிதரும் தான் காரணம் என்னும் கசப்பான உண்மை உறுத்திக் கொண்டிருந்தது. அப்பொழுது ஏற்கெனவே பார்த்துப் பழகிவிட்ட மகாபாரதத் தொடர் கண்ணில்பட்டது. தீதும் நன்றும் பிறர் தர வாரா கோட்பாட்டை நமக்குப் பொருத்திப் பார்த்தால் தானே வலிக்கிறது, மகாபாரதத்திற்குப் பொருந்துகிறதா என ஆராய்ந்தேன். மகாபாரதத்தின் இறுதியில் பாண்டவர் வென்றனர். கௌரவர் தோற்றனர். நம் கோட்பாட்டின்படி பார்த்தால், பாண்டவரின் வெற்றியாகிய நன்மைக்கு அவரே காரணம். கௌரவரின் தோல்வியாகியத் தீமைக்கு கௌரவரே காரணம். கணக்கு சரியாகிவிட்டது அல்லவா! ஆனால், நம் சந்தேகம் அதுவல்லவே! ஒருவர் தமக்குத்தாமே எப்படி தீமை செய்து கொள்ளமுடியும்? என்பது தானே!!
முதலில் எனக்கு ஒன்று சொல்லுங்கள். நன்மை என்பது என்ன? தீமை என்பது என்ன? இவற்றை எது தீர்மானிக்கிறது? பாண்டவரின் வெற்றி அவர்க்கு நன்மை. கௌரவரின் தோல்வி அவருக்குத் தீமை. எனினும், இவ்வெற்றியையும் தோல்வியையும்அவர்களுக்கு எது பெற்றுத்தந்தது? ஆம். நீங்கள் நினைப்பது சரிதான். பாண்டவர் அறத்தின்(தருமத்தின்) வழி நின்றனர். வெற்றியாகிய நன்மை பெற்றனர். கௌரவர் அறமற்றதைச் செய்தனர். தீமையுற்று அழிந்தனர். அப்படியெனில் அறம் தான் நன்மை, தீமையைத் தீர்மானிக்கிறது என்னும் முடிவுக்கு வரலாம் அல்லவா!
அப்படியெனில் அறத்தை எது தீர்மானிக்கிறது? பாண்டவர் நல்ல மனம் கொண்டவராக விளங்கினர். அவரது சொல்லும் செயலும் கூட அவ்வாறே இருந்தது. அதனால் தானே அவர்களை நாம் நல்லவர்கள் என்கிறோம். ஆனால், கௌரவர் பொறாமை வஞ்சம் சூழ்ச்சி ஆகியவற்றின் இருப்பிடமாக விளங்கினர். தீய எண்ணம், சொல், செயலையே வெளிப்படுத்தினர். அதனால் அவர்களைத் தீயவர் என்கிறோம். ஆக, நல்லவை எல்லாம் அறம்; தீயவை எல்லாம் அறமற்றவை; ஒருவரின் எண்ணம், சொல், செயல் தான் அறத்தை முதன்மை நிலையில் நின்று தீர்மானிக்கிறது. இந்த அறம்தான் ஒருவரின் நன்மை தீமையைத் தீர்மானிக்கிறது. மொத்ததில் விதைப்பதே விளைகிறது. கௌரவர் தமது தீய எண்ணம், சொல், செயல் ஆகியவற்றால் தமக்குத்தாமே தீமை புரிந்து கொண்டனர் என்பது இதனால் நன்கு விளங்குகிறது. நம் முன்னோர் கோட்பாடான, அவரவர் நன்மை தீமைக்கு அவரவரே காரணம் என்பது அவர்களுக்கு சாலப் பொருந்துகிறது; நம் தேடலுக்கும் விடை கிடைத்துவிட்டது அல்லவா!
ஆனாலும், நம்மில் பலர் நினைக்கலாம், ‘நான் என் வாழ்வில் யாருக்கும் எந்தத் தீமையும் செய்யவில்லை. என் மனமறிந்தவரை அறவழியில் தான் செயலாற்றுகின்றேன், எனினும் துன்பப்படுகிறேன் என்று. (இதுதான் கட்டுரை எழுத காரணமே!!) இப்படி ஒரு எண்ணம் தோன்றினால் இதுதான் நீங்கள் உங்கள் செயலைச் சுய அறப்பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய சரியான தருணம். அதற்கு முன்பு உங்களிடம் மேலும் ஒரு கேள்வியைக் கேட்டு விடுகிறேன். அறம் என்பது எப்படி தீர்மானிக்கப்பட வேண்டும்? அவரவருக்கு ஒன்றாக? அல்லது அனைவருக்கும் ஒன்றா? நடுநிலையாய் நின்று, நன்கு யோசித்து விடை சொல்லுங்கள்.பிறகு மாற்றி விழிக்கக்கூடாது!
இதற்கான விடை தேட மீண்டும் மகாபாரதத்திற்கே வருவோம். பெரும்பாலும் இக்கதை அனைவருக்கும் தெரிந்த ஒன்று என்பதால் நாமும் விவாதிக்க வசதியாக இருக்கும். அவரவருக்கு ஒரு அறம் என இருப்பதுதான் சரி என்றால், தருமரும் பீஷ்மரும் கூட அறம் என நினைத்து சில அறமற்றவையைச் செய்திருக்கலாம். எப்படி தெரியுமா? ஒருவரை குறிப்பாகப் பெண்களை மானபங்கம் செய்வது அறமல்லாத காரியம். இது உலகுக்கே பொதுவான அறம். எனினும், அரசர் செய்வது அறமற்றதாக இருந்தாலும் அவர் சொல்லுக்குப் பணிந்திருப்பதே தனது அறம் என எண்ணியதால் தானே பாஞ்சாலி துகிலுரித்தலின் போது அமைதி காத்தார் பீஷ்மர். சூதாடுதல் தவறு. இது உலகுக்கே பொதுவான அறம். ஆனால், தருமரோ, கௌரவர் நட்பு வேண்டி அழைப்பதால் சூதாடலாமெனத், தான் கொண்ட ஒரு அறத்தின் காரணமாக அனைத்தையும் பணயம் வைத்து சூதாடித் தோற்கிறார். இது போல் துரியோதணனும் சகுனியும் கூட அவர்தம் அறமல்லாத செயலுக்கு ஆயிரம் நியாயமான காரணங்கள் கொண்டிருக்கலாம். காந்தியைக் கொன்ற கோட்சேவும் தனது நியாயத்தைக் கொண்டிருக்கலாம். காந்தியின் நியாயங்கள் கோட்சேவுக்கு அநியாயமாகவும் பட்டிருக்கலாம். பொதுவாகச் சொல்வதென்றால், குற்றத்திற்குப் பின்னனியிலும் நியாயங்கள் சொல்லப்படுவதுண்டு. நியாயம் இதுவெனக் கருதிப் பல அநியாயங்கள் நடப்பதுமுண்டு. இந்த இடத்தில் நேர்மையாகச் சிந்தித்தால், அறம் ஆளுக்கேற்றார் போல் மாறக்கூடாது! மாறுவதும் தவறு. அறம் அதற்கு ஒரே வடிவம்! ஒரே நிறம் தான் இருக்க வேண்டும்! இருப்பது தான் சரி என்றே தோன்றுகிறது. அதாவது அவரவருக்கு ஒரு அறம் என இருக்கக் கூடாது. அனைவருக்கும் அறமானது ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். அப்போது தான் அறம் தழைக்கும். மனம் சிறக்கும். அறத்தின் வடிவமாகிய நன்மைகள் உலகில் நிறைந்திருக்கும். தீமைகள் ஒழியும் அல்லவா!
எளிமையாகச் சொல்வதென்றால், பிறருக்கு ஒரு சிறு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய, ஒருவரின் எந்த ஒரு எண்ணமும் சொல்லும் செயலும் கூட அறமாகாது. பிறருக்கு ஒரு சிறு குற்றத்தை, தீங்கை ஏற்படுத்தாத ஒருவரின் நல்ல எண்ணம், சொல், செயலே அறமாகும். அத்தகைய வலிமை வாய்ந்த அறத்தின் வழியில் ஒருவர் இயங்கும்போது ஏற்படும் நன்மைக்கும் அவரே காரணமாகிறார். அறமற்ற வழியில் வினையாற்றும் போது ஏற்படும் தீமைக்கும் அவரே காரணமாகிறார். எனவே தான் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றனர். இக்கருத்தினைக் கோட்பாடாக மனதில் நிறுத்தி, நம் செயலில் எது அறம், எது அறம் அல்லாதது எனச் சுய அறப்பரிசோதனை செய்து பார்த்தால், நாம் செய்த தீமை என்ன? எங்கு நாம் தவறிழைத்தோம்? என்பது தெளிவாக விளங்கும்.
இவற்றையெல்லாம் நோக்குகையில், அறம் என்பது இவ்வளவு நுட்பமானதா? என்ற வியப்பும் சிலிர்ப்பும் ஒருபுறம் இருந்தாலும், மனித சமுதாயம் அறிந்தோ அறியாமலோ தவறிழைத்தலை இயல்பாகக் கொண்டது ஆயிற்றே! இதுதான் நடப்பியலும் கூட. இச்சூழலில் இத்தகைய அறக் கொள்கையோடு மனிதர் வாழ்வது சாத்தியமா என்ற கவலையும் தோன்றுகிறது. ஆனால் இப்படித்தான் வாழ்திருக்கின்றனர் நம் சங்கத் தமிழர். அதனாலன்றோ, தனக்கு ஏற்படுகிற துன்பத்திற்குத் தானே முதல் காரணம் என மனம் திறந்து ஒப்புக்கொள்ளும் அறம் அவர்களிடத்தில் இருந்திருக்கிறது. ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா‘ என்னும் பாடலும் நேர்மையாகப் பாட முடிந்திருக்கிறது! இப்பாடல் வரி, ஒரு கருத்து மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதரும் தம் வாழ்வில் பின்பற்ற வேண்டிய மிகச் சிறந்த வாழ்வியல் கோட்பாடும் ஆகும். ஏனெனில், நமக்கு வாழ்வில் நிகழும் எந்த ஒரு விளைவிற்கும் பிறர் காரணமல்ல, நாமே தான் காரணமாகிறோம் என்னும் கசப்பான உண்மையை நேர்மையாக எடுத்துரைக்கிறது இப்பாடல். மேலும், நடக்கும் நிகழ்வுகளுக்கு நாம் எப்படி காரணமாகிறோம் என நம்மைச் சிந்திக்கவைத்து சுய அறப்பரிசோதனை செய்யவும் தூண்டுகிறது.
நண்பர்களே! நாம் அனைவரும் வாழ்வில் எப்போதும் இன்புற்றிருக்கவே விரும்புவோம். இன்பம் என்பது நாம் ஆற்றும் நற்செயலில் உள்ளது. நற்செயல் நம் நல்லெண்ணம், நற்சிந்தனையில் உருவாகிறது. ஆக அனைத்தும் நம்மிடத்தில் தான் உள்ளது. அதனால் தான் நமக்கு நடக்கும் நன்மைக்கு மட்டுமல்ல தீமைக்கும் நாமே பொறுப்பாகிறோம். எனவே, நல்வழியில் இருந்து நாம் என்றும் விலகாமலிருக்க, நம் செயலைச் சுயஅறப்பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கு “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்னும் முக்கிய வாழ்வியல் கோட்பாட்டினை என்றென்றும் மனதில் நிறுத்தவேண்டும்.
இந்தத் தெளிவை, கணியன் பூங்குன்றனார் பெற்றதனால் தான், ஒருவருடைய உயர்வு தாழ்வு, சிறப்பு இகழ்ச்சி எல்லாம் அவரவர் செயலால் வருவது; இத்தெளிவைப் பெற்றவர் யாரையும் வியக்கவோ, இகழவோ செய்யார் என்னும் பொருள் பொதிந்த, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்! தீதும் நன்றும் பிறர் தர வாரா!’ என்னும் பாடலைப் பாடியுள்ளார். இதுவே நானும் இப்பாடலால் பெற்ற தெளிவு. இதில் உங்களுக்கும் தெளிவு கிடைத்திருந்தால் மகிழ்ச்சி. உங்கள் தெளிவை என்னிடம் பகிர்ந்தால் பெருமகிழ்ச்சி. நன்றி.
கட்டுரையாக்கம் தமிழோடு வள்ளி
(முனைவர் ஜ.வள்ளி)
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
சி.டி.டி.இ.மகளிர் கல்லூரி, சென்னை -11.