நான் ம. ஜீவிதா, மூன்றாம் ஆண்டு, பி காம் படிக்கிறேன். நான் தற்போது யூடியூப் சேனல் ஒன்றினை நடத்தி வருகிறேன். எனது சேனலின் பெயர் “விழித்திரு”. விழித்திரு என்று பெயர் வைத்ததற்குக் காரணம், நமது விழிகள் மூடிக்கொண்டு இருக்கும் பொழுது நமக்கு ஒரு இருட்டு மட்டுமே தென்படும். ஆனால், அதுவே விழிகள் திறந்திருக்கும் பொழுது அழகிய உலகத்தைக் காண முடியும். அதுபோல, எனது யூடியூப் சேனலில் வீடியோக்களைக் காண்பதன் மூலம் ஒருவர் தான் தேடிக் கொண்டிருக்கும் செய்திகளைப் பற்றி முற்றிலுமாகத் தெரிந்து கொள்ள இயலும். அவரது விழிகள் திறப்பது போல அனைத்து சந்தேகங்களும் தீரும். எனது சேனல், கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளுடன் தொடர்புடையது.
நான் இந்த சேனலை 2020 ஆம் ஆண்டு, பயனுள்ள பொழுதுபோக்கிற்காக என்னுடைய அப்பாவின் ஆதரவுடன் தொடங்கினேன். அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வத்தோடு வீடியோக்களைப் பதிவேற்றம் செய்யத் தொடங்கினேன். அப்போது எனக்கு இப்படி ஒரு சேனலைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து எந்த விதமான யோசனையும் அனுபவமும் இல்லை. ஆனாலும், அதன் மேல் இருந்த ஆர்வத்தின் அடிப்படையில், நான் தொடர்ந்து வீடியோக்களைப் பதிவேற்றம் செய்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதனைப் பற்றி முற்றிலுமாக கற்றுக்கொண்டேன். பிறகு எவ்வாறு யூடியூப் சேனலை செயல்படுத்த வேண்டும், அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று முற்றிலுமாகக் கற்றுக்கொண்டேன்.
எனது இரண்டாம் ஆண்டு கல்லூரிப் படிப்பின் போது, நான் போட்டித் தேர்வுக்குப் படிக்கத் தொடங்கினேன். அப்போது பல சந்தேகங்கள் உருவானது. எவ்வாறு படிக்க வேண்டும், எவ்வாறு ஒரு வேலை வாய்ப்பை அறிய வேண்டும், எவ்வாறு அதை திறம்படக் கண்டறிந்து விண்ணப்பித்து வேலையில் அமர வேண்டும் என்பன போன்ற சந்தேகங்களும், குழப்பங்களும் எழுந்தன.
பிறகு அதை நானே முற்றிலுமாக தெரிந்து கொள்ளலாம் என்று பல யூடியூப் சேனல்களில் தேடத் தொடங்கினேன். ஆனால் முற்றிலுமாகத் தகவல்கள் கிடைக்கவில்லை. பல யூடியூப் சேனல்கள் தங்களின் வீடியோக்களில் முழு விவரம் கிடைக்கும் என்று பதிவிட்டு வீடியோக்களை அப்லோடு செய்து உள்ளனர். ஆனால் அந்த வீடியோக்களில் முற்றிலுமாகத் தகவல்கள் எனக்குக் கிடைக்கவில்லை. மீண்டும் குழப்பத்திற்கு உள்ளானேன்.
அதனால் இனிமேல் குழம்பாமல், நாமே விஷயங்களைத் தேடிக் கொள்ளலாம் என்று முடிவுசெய்து தகவல்களைக் கண்டறியத் தொடங்கினேன். அதற்குப் பிறகுதான், என்னைப் போல பலர் எவ்வாறு ஒரு வேலை வாய்ப்பை பெற வேண்டும், அதற்கு என்னென்ன கல்வியைத் தொடர வேண்டும் என்ற குழப்பத்தில் இருப்பார்கள்; அவர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணினேன். கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பாக நான் சேகரித்த செய்திகளை வகைப்படுத்தி ஒரே வீடியோவில் முற்றிலுமாக தகவல்களைக் கொடுக்கத் தொடங்கினேன்.
தற்போது எனது சேனலில் மேற்கண்ட தகவல்களைக் கொண்ட வீடியோக்களைப் பதிவேற்றம் செய்து வருகிறேன். எனது தற்போதைய நோக்கம், எனது சேனலை வருமானம் ( Monetization) பெறுவதற்குரிய ஒன்றாக உருவாக்குவதும் ஆகும். அதற்கான விதிமுறைகளைப் பின்பற்றி முயற்சி செய்துவருகிறேன். இதன்மூலம் பொழுதுபோக்குகளை நமக்கு மட்டுமில்லாமல் சமுகத்திற்கும் பயனுள்ள வகையில் உருவாக்கிக் கொள்ளமுடியும் என்பதை நன்கு அறிந்துகொண்டேன். நான் அறிந்ததைப் பிறருக்குக் கூறுவதிலும் மகிழ்கின்றேன்.